×

சிறார் இணைய குற்றங்களை தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு

காத்மாண்டு: ‘தொழில்நுட்பத்தின் விரைவான வளர்ச்சிக்கு மத்தியில், சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் சிறுவர்கள் சம்மந்தப்பட்ட நாடு கடந்த டிஜிட்டல் குற்றங்களை தடுக்க முடியும்’ என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறி உள்ளார்.

நேபாள தலைமை நீதிபதி பிஷ்வோம்பர் பிரசாத் ஷ்ரேஸ்தாவின் அழைப்பின் பேரில் 3 நாள் பயணமாக அந்நாட்டிற்கு சென்றுள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், காத்மாண்டுவில் சிறுவர் நீதி தொடர்பான தேசிய கருத்தரங்கில் நேற்று பேசியதாவது:
குழந்தைகள் சுத்தமானவர்களாகத்தான் இந்த உலகிற்குள் நுழைகிறார்கள். ஆனால் அவர்களின் பலவீனம், பாதிப்பு மற்றும் குடும்ப பொருளாதார கஷ்டம், பெற்றோரின் அலட்சியம், தவறான நட்பு போன்ற எண்ணற்ற காரணிகள் தவறான பாதைக்கு இட்டுச் செல்கின்றன. சட்ட வழக்குகளில் சிக்கிய குழந்தைகளின் பாதிப்புகள் மற்றும் தனிப்பட்ட தேவைகளை நாம் அங்கீகரிப்பதும் சிறார்களுக்கு வழங்கும் நீதியின் ஒரு அங்கமாகும். நமது நீதி அமைப்புகள், பச்சாதாபம் கட்டுதல், மறுவாழ்வு அளித்தல் மற்றும் சமூகத்தின் மீண்டும் ஒன்றிணைவதற்கான வாய்ப்புகளுடன் தீர்வு தருவதை உறுதி செய்ய வேண்டும்.

தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருவதால், ஹேக்கிங், சைபர்புல்லிங், ஆன்லைன் மோசடி மற்றும் டிஜிட்டல் துன்புறுத்தல் போன்ற சைபர் குற்றங்களில் சிறார்கள் ஈடுபட வாய்ப்பாகிறது. மோமோ சேலஞ்ச் போன்ற ஆன்லைன் ஆபத்துக்கள் சிறார்களின் பாதிப்பை எடுத்துக்காட்டுகிறது. எனவே, சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலமும், சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதன் மூலமும் சிறார்களை உள்ளடக்கிய நாடு கடந்த டிஜிட்டல் குற்றங்களை தடுக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

The post சிறார் இணைய குற்றங்களை தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Chief Justice of the ,Supreme Court ,Kathmandu ,Chief Justice ,T. Y. Chandrasuit ,Nepal ,Bishwomber Prasad ,
× RELATED உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள்...